ரணிலின் வடக்கு விஜயம்: போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளவர்களுக்கு எதிராக தடை உத்தரவு(படங்கள்)
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தில் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள 10 பேருக்கு எதிராக காவல்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பூநகரி கோட்டை, கயு உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர் பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ள உள்ளார்.
காவல்துறையினரால் தடை உத்தரவு
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளும் அதிபர் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து பூநகரி காவல் நிலைய பொறுப்பதிகாரியால் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பெறும் வகையில் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, சட்ட ரீதியாக மக்களிற்கு வழங்கப்பட் உரிமையை தடுக்க முடியாது எனவும், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் போராட்டங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிகழ்வு இடம் பெறும் பகுதியில் போராட்டத்தை மேற்கொண்டால் கைது செய்யும் வகையிலும், உயர்தர பரீட்சை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளிற்கு இடமளிக்காத வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.