பறிபோகும் ரஞ்சனின் பிரஜாவுரிமை! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்
கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜா உரிமை 7 வருடங்களுக்கு இல்லாமல்போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜா உரிமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், நான்கு வருடங்களுக்கு கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாகி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றவியல் குற்றத்துக்கு ஆளாகியதன் மூலம் அவரது சிறைத்தண்டனை 6மாதங்கள் முடிவடைந்த பின்னர், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகிவிடும்.
6மாதங்களுக்குள் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், அவரது நாடாளுமன்ற ஆசனம் வெறுமையாகும்.
அவரது நாடாளுமன்ற இடத்துக்கு பொதுத் தேர்தலில் அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளரை நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடுவோம்.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனையில் 6மாத காலம் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போவதுடன் அவரது பிரஜா உரிமையும் இல்லாமல் போகின்றது. அதாவது, அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை காலம் முடிவடைந்து ,அவர் விடுதலையாகும் தினத்தில் இருந்து 7 வருட காலங்களுக்கு அவரது பிரஜா உரிமை இல்லாமலாகும்.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகும் என்றார்.