பிள்ளையான் தரப்பினரை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்: எதிரணி கேள்வி
குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான், ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் கொலையாளிகள் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார்.
கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இராணுவப் பாதுகாப்பில் வசிக்கின்றார் அதேசமயம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அரசாங்கத்தில் பணியாற்றுகிறார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சம்பிக்க ரணவக்க, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து நாரஹன்பிட்டி கட்சி அலுவலகத்தில் சென்ற வார இறுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரு காலத்தில் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஹன்சீர் ஆசாத் மௌலானாவின் வெளிப்பாட்டின் அடிப்படையில் சனல் 4 ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
மேலும் 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்து கட்டளையிடும் வகையில் புலிகளுக்கு பணம் செலுத்தியமை தொடர்பிலும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்