செங்கடலில் அரங்கேறும் அட்டூழியங்கள்! ஹவுதி படையினரை கண்டிக்கும் ஐ.நா
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி படையினர் நடத்தும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு ஆணையகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் ஐ.நா. பாதுகாப்பு ஆணையகம் நிறைவேற்றியுள்ளது, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன,
"செங்கடல் வழியாகச் சென்ற ‘கேலக்ஸி லீடா்’ சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினா்.
24 முறை தாக்குதல்கள்
அதன் பின்னர் அந்தப் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீது இதுவரை சுமாா் 24 முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன, இதனை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இத்தகைய தாக்குதல்களை ஹவுதி படையினர் உடனடியாகக் கைவிட வேண்டும்." என்று அந்தத் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து, தங்கள் நாட்டையொட்டிய செங்கடல் பகுதி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.
இந்த காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு அதரவு அளிக்கும் வகையில் இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்களை மட்டும் தாக்கி அழிப்பதாக அவா்கள் அறிவித்தனர்.
கடல்வணிகம் பாதிப்பு
ஆனால், நாள் செல்லச் செல்ல இஸ்ரேலுடன் எந்தவித தொடா்பும் இல்லாத கப்பல்கள் மீதும் அவா்கள் தாக்குதல் நடத்துவது அதிகமாகி வருகிறது.
இதனால், உலகின் மிக முக்கியமான கடல்வணிக வழித்தடமான அந்தப் பகுதியில் சரக்குப் போக்குவரத்து மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து பல்வேறு நாடுகளுக்கும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், செங்கடலில் ஹவுதி படையினர்களிடமிருந்து சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூா் போன்ற பல்வேறு நாடுகளும் தங்களது போா்க் கப்பல்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்ததுவது தொடா்ந்தால் ஹவுதி படையினர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் அண்மையில் எச்சரித்திருந்தன.
அதனைப் பொருட்படுத்தாமல் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடா்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |