முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
முல்லைத்தீவு (mullaitivu) செஞ்சோலையில் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 18 வது ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இடைக்கட்டு சந்தி பகுதியில் விமான தாக்குதல் இடம்பெற்ற செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் உயிரிழந்த மாணவிகளின் உறவினர்களால் இன்று (14) சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல்
அதனை தொடர்ந்து செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில் உள்ள நினைவேந்தல் வளைவில் நினைவேந்தல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ,முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2006ஆம் ஆண்டு இதேநாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர்கள் வளாகத்தில் முதலுதவி பயிற்சிக்காக தங்கிநின்ற மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |