தேசிய ஒலிம்பிக் குழுவின் முக்கிய உறுப்பினர்களை பதவி நீக்குமாறு கோரிக்கை
தேசிய ஒலிம்பிக் குழுவின் (National Olympic Committee) தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவை உடனடியாக நீக்குமாறு தேசிய விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் அரசியலமைப்புக்கு அமைய புதிய அதிகாரிகள் குழுவை நியமிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒலிம்பிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று நடைபெற்ற (17) அதிவிசேட பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
விசேட காவல்துறை பாதுகாப்பு
சர்வதேச ஒலிம்பிக் குழுவால் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் நிதி நிறுத்திவைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விசேட காவல்துறை பாதுகாப்பின் கீழ் மாலை 5.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பொதுக்கூட்டம் சுமார் 27 உறுப்பு சங்கங்களின் பங்கேற்புடன் சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரவு 9 மணியளவில் ஒலிம்பிக் குழுவின் தலைவர் திடீரென கூட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
