'ஷி யான் 6' சீன ஆய்வுக் கப்பல் பயணத்தை ஆரம்பித்தது
'ஷி யான் 6' எனும் சீன ஆய்வுக் கப்பல் தென் சீனத் துறைமுகத்தில் இருந்து இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.
சீன அறிவியல் கல்வியகத்தின் கீழ் தென் சீனக் கடல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆய்வுக் கப்பல் 12,000 கடல் மைல்களுக்கும் அதிகளவான பரப்பில் பயணிக்கவுள்ளது.
இந்த ஆய்வுக் கப்பல் 80 நாட்கள் கடல் பரப்பில் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 13 ஆய்வுக் குழுக்களின் 28 அறிவியல் ஆய்வுத் திட்டங்கள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
வளங்கள் மற்றும் ஆராய்ச்சி
இந்த ‘ஷி யான் 6’ ஆய்வு கப்பலினை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு சீன அரசு சென்ற வருடம் (2022) அனுமதி கோரியிருந்தது.
60 பேரைக் கொண்ட 'ஷி யான் 6' அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலானது கடல்சார்வியல், கடல் புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
தவிரவும் இந்தக் கப்பல் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் நீர்நிலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 'ஷி யான் 6' ஆய்வு கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது.
நாரா நிறுவனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘ஷி யான் 6’ சீன ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.