மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள காப்புறுதி திட்டம்
நாட்டிலுள்ள மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா (Suraksha) காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வாரம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பொருளாதார சலுகை
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ” நாடாளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அதனால் சட்டமூலத்துக்கு அனைவரும் ஆதரவளித்து மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதும் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் இதன் மூலம் இரத்தாகின்றன.
அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி 2017ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சுரக்ஷா காப்புறுதி 2022 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. என்றாலும் குறித்த சட்டமூலம் ஊடாக மீண்டும் அந்த காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம்.
சிறிலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம்
பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்கு இது பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய காப்புறுது தொடர்பில் நிபுணத்துவமிக்க சிறிலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் Srilanka Insurance) போன்ற நிறுவனத்தை சுரக்ஷா காப்புறுத்திக்கு பங்காளியாக்கிக்கொள்ள இருக்கிறோம்.
இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3 இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரை நன்மை கிடைக்கிறது.
அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |