அரிசி மாபியாவிற்கு தக்க பாடம் புகட்டுவோம் - அமைச்சர் மஹிந்தானந்த திட்டவட்டம்
அரிசி மாபியாவினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில் இவ்வருடத்தின் சிறுபோகத்தில் விளைந்த நெல்லினை அரசாங்கம் நிர்ணைய விலையில் கொள்வனவு செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
அரசாங்கம் அரசியினை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளமையினை அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்க்கின்றனர். நாட்டில் போதியளவு அரிசி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
அரிசி விலை அதிகரித்துள்ளமையினால் தான் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளோம். அரிசி இறக்குமதி செய்யப்படும் போது பத்து ரூபா குறைவடையும். இதன் மூலம் அரிசி மாபியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும்.
அரிசி மற்றும் முட்டை விலைகளை ஒரு சிலர் தீர்மானிக்க முடியாது. அப்படி என்றால் அரசாங்கம் என்னத்திற்கு இருக்கின்றது.
ஆகவே விலையினைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் கையில் எடுக்க வேண்டும். எனவே அரிசியினை அதிக விலைக்கு விற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும்.
அரசாங்கம் அரிசி விலையினை 98 ரூபா என்ற நியம விலையில் வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.