பிரித்தானிய இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த ரிசி சுனக்கின் கட்சி
பிரதமர் ரிஷி சுனக் மத்திய கிழக்கு பயணத்தில் இருக்கும் நிலையில் அவரது கட்சி இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்தநிலையில், பிரித்தானியாவில் நேற்று(19) இடம்பெற்ற இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் எதிர்கட்சியான தொழிற்கட்சி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுவரை பழமைவாத கட்சியின் பிடியில் இருந்த இரண்டு தொகுதிகளும் தற்போது தொழிற்கட்சியின் வசமாகியுள்ளது.
இடைத்தேர்தல்
பிரித்தானியாவில் ஆளும் கட்சிமீது மக்களுக்கு உள்ள வெறுப்பு நேற்று அவர்களின் பிடியில் இருந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சிகரமாக எதிரொலித்துள்ளது.
தாம்வொர்த் மற்றும் மிட் பெட்ஃபோர்ட்ஷையர் ஆகிய இரண்டு தொகுதிகளுள் இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.தாம்வொர்த் தொகுதியில் ஏறக்குறைய 24,000 வாக்குகளால் ஆளுங்கட்சி வேட்பாளர் தொழிற்கட்சி வேட்பாளர் சாரா எட்வர்ட்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.
மேலும், 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் ஒன்றில் ஆளும் கட்சி இழந்த மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.
முக்கியமான வெற்றிகள்
மிட் பெட்ஸ் தொகுதியிலும் தொழிற்கட்சியின் வேட்பாளர் அலிஸ்டர் ஸ்ட்ராதெர்ன், கென்சவேட்டிவ் வேட்பாளரைவிட 19 000 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.
தற்போது பிரித்தானிய வாக்காளர்கள் தொழிற்கட்சியைச் சுற்றி அதிக அளவில் ஒன்றிணைவது, பிரதமர் ரிசி சுனக் மற்றும் அவரது கட்சிக்கு இன்னொரு கெட்ட சகுனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தல் வெற்றிகள் தொழிற்கட்சிக்கு முக்கியமான வெற்றிகள் என அதன் தலைவர் சேர் கெயார் ஸ்ராமர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.