மட்டக்களப்பில் பாரிய இனமுறுகல் ஏற்படும் அபாயம்
மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு விவகாரம் பாரிய இன முறுகலை ஏற்படுத்தக் கூடும் என்று அப்பகுதி பண்ணையாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட விகாரை ஒன்று மீளவும் நிறுவப்பட்டு நேற்றைய தினம்(05) விசேட பௌத்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி பகிர்வு

இதனை அடுத்து மயிலத்தமடு பகுதிக்கு விரைந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்களைச் சேர்ந்த பலருக்கு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளும் துண்டு துண்டாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மயிலத்தமடு பகுதியில் இருக்கும் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியாக இருக்கின்ற காரணத்தினால், பண்ணையாளர்கள் குறித்த காணி விடயம் சம்பந்தமாக தங்களது பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெரும் அதிருப்தி

எனினும் மேல் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தடை உத்தரவு காணப்படுகின்ற போதிலும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் புத்த விகாரை அமைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவது பெரும் சவாலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என அனைவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம் இன்றுவரை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த நிலை இடம்பெறுமானால் ஒரு இன முறுகலை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.