ரிசாட்டிற்கு அடைக்கலம் - அரசின் மறுபக்கத்தை வெளிக்கொணர்ந்த பௌத்த தேரர்?
வீட்டு வேலைகளுக்காகச் சென்று தீக்காயங்களுக்கு உள்ளாகி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென, தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தன்னுடைய முன்னைய ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க விரும்பமாட்டார் என தேவால்ஹிந்த அஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு காணொளியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பணபலம் படைத்த செல்வந்தர்களின் வீடுகளில் பணியாற்றும் அப்பாவி சிறுவர்கள் துன்புறுதலுக்கு உள்ளாகி உயிரிழந்தபின் அந்த விடயம் மறைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படாமல் சட்டத்தில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வதையே இந்த சிறுமியின் மரணத்தின் ஊடாக எமக்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
நாட்டிற்கு சட்டம் இயற்ற வந்த மனிதர்கள், 12 நாட்கள் முடியும் வரை இருந்து அந்த சிறுமிக்கு தீவைத்து ,வைத்தியசாலையில் அனுமதித்து, வாக்குமூலம் எதனையும் பெறாமல், இருந்த நிலையில் மக்கள் இது தொடர்பாக பேச ஆரம்பித்து, ஆர்ப்பாட்டங்களை செய்ய ஆரம்பித்ததன் பின்னரே சட்டம் செயற்பட ஆரம்பிக்கின்றது.
இங்கு ஆளுபவர்கள் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றார்கள். ஒரு நாடு, ஒரு சட்டம், தேசிய பாதுகாப்பு இவற்றை வைத்து தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தான் வந்தார்கள். ஆனால் இன்று நம் நாட்டில் பிறந்த அப்பாவி ஏழை சிறுவர்கள் கஷ்டத்திற்காக அரசியல்வாதிகளின் வீடுகளில் வீடு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் - ஆகவே மக்கள் இந்த நிலையை புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று சிலர் இந்த விடயம் பதியுதீன் வீட்டில் இடம்பெற்றதால் இதை இனவாதமாக மாற்றி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இனவாதத்தை பரப்ப முயற்சிக்கின்றார்கள். ரிஷாட் பதியுதீன் செய்த குற்றத்திற்கு அவருக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால் மஹிந்த ராஜபக்ச அதற்கு இடம் கொடுக்கமாட்டார். அவருடைய ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தார். அவர்களுக்கிடையில் நிறைய கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரபட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் ரிஷாட்டினுடைய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது.
ஆகவே ரிசார்ட்டை பாதுகாக்கவே அரசாங்கம் முற்படுகின்றது. அதனால் தான் விரைவாக இது தொடர்பாக சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பிள்ளையின் மரணத்திற்கான நியாயம் பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.