இலங்கை வரலாற்றில் கைச்சாத்திடப்பட்ட விசித்திர உடன்படிக்கை!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமத்தை நான் அமைச்சராக இருக்கும்வரை எந்தவொரு நாட்டுக்கும் வழங்க மாட்டேன் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ஹோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள பாதகமான உடன்படிக்கைகளால் அதன் முழுமையான செயல்பாடுகளை கொண்டுசெல்வதில் சில தடைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதற்காக இரண்டு இராஜதந்திர உடன்படிக்கைகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சராக கடந்த அரசாங்கத்தில் பணியாற்றிய மலிக் சமரவிக்கிரம, துறைமுக அமைச்சருக்குக்கூட தெரியாமல் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார். இரண்டாவது உடன்படிக்கை இந்திய, ஜப்பான் அரசாங்கங்களுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
இராஜதந்திர உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் போது கைச்சாத்திடப்படும் தினம் மற்றும் உடன்படிக்கை நிறைவுக்குவரும் தினங்கள் உடன்படிக்கை செல்லுப்படியாகும் காலப்பகுதி குறிப்பிடப்படாதிருப்பின் அந்த உடன்படிக்கை செல்லுப்படியற்றதாகிவிடும்.
இலங்கை வரலாற்றில் செல்லுப்படியாகும் காலப்பகுதியொன்று இல்லாது கைச்சாத்திடப்பட்ட விசித்திர உடன்படிக்கையாக இந்த உடன்படிக்கை மாத்திரமே உள்ளது. 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் ஒரு மில்லியன் கொள்கலன்களில் மாத்திரமே சேவைகளை வழங்க கூடியதாக இருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் நிலையை உருவாக்கியிருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமையை ஒருபோது எந்தவொரு நாட்டுக்கும் வழங்க மாட்டோம் என்பதை துறைசார் அமைச்சராக உறுதியளிக்கிறேன் என்றார்.