தாலிபான்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கிய ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (17) நீக்கியுள்ளது.
ரஷ்ய (Russia) நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பு 2003 ஆம் ஆண்டு மொஸ்கோவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தலிபான்களுக்கு ஒரு இராஜதந்திர வெற்றியாகும்.
அமெரிக்கா (USA) மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்யாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.
கல்வி கற்க தடை
நாட்டின் மீது அதன் கட்டுப்பாடு இருந்தபோதிலும், மனித உரிமைகள், நிர்வாகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், தலிபான் தலைமையிலான நிர்வாகம் எந்த நாடும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.
பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொது இடங்களில் பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் தாலிபான்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியுள்ளன.
இருப்பினும் அவர்களின் அரசாங்கம் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல்
ரஷ்யா 2003ஆம் ஆண்டு தாலிபான்களை தடை செய்தது, அதை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.
ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த உதவுவதற்காக தலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மைய ஆண்டுகளில், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவை தலிபான்களை பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளன.
இந்நிலையிலேயே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
