இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது: ரஷ்ய தூதுவர் உறுதி
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ரஷ்யா ஒருபோதும் விமர்சிக்கவோ அல்லது தலையிடவோ போவதில்லை என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை
“இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கை தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தொடர முடியும்.
பாதுகாப்பு விவகாரங்களில் அதிபர் புடினின் தலைமை ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவ் தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அவர் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பலருடன் மிகவும் நன்றாக கலந்துரையாடினார்.
சில நாடுகளால் இலங்கை அழுத்தத்தில் இருப்பதை நாங்கள் கண்டோம்.
அணுமின் நிலையம்
உங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை நான் எப்போதும் தவிர்க்கிறேன். உங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் விமர்சிக்கவோ அல்லது தலையிடவோ இல்லை.
நான் ஒரு அமெரிக்க தூதரோ அல்லது பிரித்தானிய உயர்ஸ்தானிகரோ அல்லது மேற்கத்திய தூதர்களோ அல்ல.
இலங்கையில் ஒரு சிறிய அணுமின் நிலையம் நிறுவ எதிர்பார்க்கப்படுகின்றது. அது 110 மெகாவாட் மின் நிலையம் ஆகும்.
இலங்கைக்கு மாற்று எரிசக்தி தேவை என்பது எனது கருத்து. ஆனால் அதை முடிவு செய்வது இலங்கையின் உரிமையும் விருப்பமும் ஆகும்..” எனத் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |