பாடசாலை மாணவர்களுக்கு போர்பயிற்சி - ரஷ்யா மீது குவியும் கண்டனம்
பாடசாலை மாணவர்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கும் ரஷ்யாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
உக்ரைன் மீதான போர் தொடங்கி 575 நாட்களை கடந்துள்ளன. இதில் ரஷ்யா பெருமளவில் ஆளணி இழப்புக்களை சந்தித்து வருகிறது.
இதனை ஈடு செய்யும் வகையில் அண்மையில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பிலும் ஈடுபட்டது.இந்த நிலையில் தற்போது பாடசாலை மாணவர்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
மாணவர்களுக்கு போர்பயிற்சி
இதன்படி அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு பதுங்கு குழி அமைப்பது, கைக்குண்டுத் தாக்குதல், துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக கற்பித்தல் செயற்பாடுகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் இராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
போர் வீரர்களாக கட்டாயப்படுத்தி மாற்ற
பயிற்சிகளுக்கு மாணவர்கள் வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள். உயர்நிலை பாடசாலைகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

மேலும், மாணவர்கள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது. இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷ்ய போர் வீரர்களாக கட்டாயப்படுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.