எகிப்திய பிரதமரை சந்தித்த ருவான் விஜேவர்தன
ஆபிரிக்க காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, எகிப்திய பிரதமர் முஸ்தபா மடிபௌலியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஆபிரிக்க காலநிலை மாற்ற மாநாட்டில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ருவான் விஜேவர்தன, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் எகிப்து பிரதமருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வர்த்தக மேம்பாடு
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கனநாதனும் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.