கொழும்பில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் அம்மக்களையே விரட்ட முயற்சிக்கிறார் - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்த தற்போதைய அதிபர் மக்களை விரட்ட முயற்சிப்பது பாரிய பிரச்சினை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று(07) எதிர்க்கட்சி நிறைவேற்று சபையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
சாதாரண ஏழை மக்களின் காணிகள்

“அதிபர் தலைமையிலான அரசாங்கம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிசைவாசிகள், குறைந்த வருமானம் பெறும் வீடுகள் மற்றும் நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டங்கள் அனைத்தையும் அகற்றியுள்ளன.
அவற்றை அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் புதிய திட்டங்களை வழங்குமாறு அதிபர் மக்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் மேல் மாகாணங்களில் அபிவிருத்தி செய்யப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் அதிகம் உள்ளன.
இந்த காணிகள் தனியார் மற்றும் பொது பங்களிப்பின் கீழ் வெளிப்படைத்தன்மையுடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் குடிசைகள், குறைந்த வருமானம் பெறும் வீடுகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை அகற்ற முயற்சிக்கின்றன.
சாதாரண ஏழை மக்களின் காணிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கத்திற்கு சொந்தமான அதிகளவான காணிகள், சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளும், புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன.
அவ்வாறான நிலங்களை இத்திட்டத்திற்காக பயன்படுத்த வேண்டும்” என்றார்.