பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் சஜித்திற்கும் இடையில் விசேட சந்திப்பு
பிரித்தானிய (British) வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து - பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலருக்கும் (Ben Mellor) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (07) கொழும்பில் (Colombo) இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து சஜித் விளக்கினார்.
மோசமான ஆட்சி
அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சஜித் சுட்டிக்காட்டினார்.
சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி ஹுமைரா ஹாடியா (Humairaa Hatia) மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Petrick), முதல் செயலாளர் டொம் சோப்பர் (Tom Soper) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சஜித் பிரேமதாச (Sajith Premadasa), நிரோஷன் பெரேரா (Niroshan Perera) ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |