மேய்ச்சல் தரை தொடர்பாக வாய் திறக்க மறுக்கும் எதிர்கட்சி தலைவர்: அரியநேத்திரன் குற்றச்சாட்டு
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அத்துமீறல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகம் வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விகாரைகள் புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் நிலை
“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை எதிர்கட்சி தலைவர் பெற்றார்.

அப்படியிருக்கையில் மட்டக்களப்பில் ஒரு அனியாயம் நடக்கும் போது பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாச இதுவரை அதைப்பற்றி அலட்டாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளில் அத்து மீறி பயிர்செய்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்று மாறு இதுவரை எதிர்கட்சி தலைவர் ஏன் கூறவில்லை இந்த விடயம் தொடர்பாக ஏன் வாய்திறக்கவில்லை.
கடந்த 2024 ,யூலை, 24 இல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு மாதவனை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தார்.
தற்போது ஆட்சியில் இல்லை என்றாலும் எதிர்கட்சி தலைவர் என்ற சிறப்புரிமையை பாவித்து நாடாளுமன்றில் மேய்ச்சல் தரை தொடர்பாக விவாதிக்க முடியும்.
அதற்கு சிரமமாக இருந்தால் நாடாளுமன்றில் இது தொடர்பாக உரையாற்றி இருக்கலாம். இரண்டு வருடங்களாக எதிர்கட்சி தலைவராக இருந்து விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் இவர் மேய்ச்சல் தரை விடயத்தை கணக்கெடுக்காமல் இருப்பது அவருடைய இனவாதம் வெளிப்படுகிறது என்பதே உண்மை“ என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |