பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு: ரணிலுக்கு புகழாரம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அதிபரின் சம்பள உயர்வு முன்மொழிவை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அதிபரின் பணிப்புரை சம்மந்தமாக ஊடக அறிக்கையின் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு அதற்கேற்ற வகையில் நியாயமான ஒரு சம்பள உயர்வை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணி உரிமை
தொடர்ந்தும் அவர் கூறியதாவது, “எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என அதிபர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் நிறுவனங்களின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் தமது தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
காணி உரிமை உள்ளிட்ட விடயங்கள் சம்மந்தமாகவும் அதிபர் இதன்போது பேச்சு நடத்தியுள்ளமை பெருந்தோட்ட மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைக்கவுள்ளது என்பது மற்றுமொரு சான்றாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு
அரச பங்காளியாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகம் தொடர்பிலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பிலும் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அதிபர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிக்கின்றது.
மலையகம் தொடர்பில் அதிபரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு ஏனைய மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி சமூக மேம்பாட்டுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்” என்றார்.