சஜித் மற்றும் நளினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சனத் நிஷாந்த கோரிக்கை!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோரியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஏற்பட்ட பதற்ற நிலையை தமது தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மகிந்த மீதான குற்றச்சாட்டு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”சிறிலங்காவின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மகிந்த ராஜபக்ச தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பல குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகிறார்.
அவரை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை சஜித் பிரேமதாச முன்வைக்கிறார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் கருத்து வெளியிடும் போது, அவரது கட்சியின் உறுப்பினரான நளின் பண்டார தமது தொலைபேசியில் அதனை காணொளியாக பதிவு செய்ய ஆரம்பித்தார்.
நளின் பண்டாரவின் செயல்
நான் உள்ளிட்ட எனது கட்சி உறுப்பினர்களின் அனுமதி இல்லாது நளின் பண்டார குறித்த காணொளியை பதிவு செய்திருந்தார்.
இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்)
இதையடுத்து, நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்ட போது, காணொளி பதிவு செய்வதை நிறுத்துமாறு சபாநாயகர் பல தடவைகள் நளின் பண்டாரவுக்கு தெரிவித்தார்.
எனினும், அதனை மீறி அவர் காணொளியை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
சிறப்புரிமைகளை மீறல்
இந்த நிலையில், கடந்த மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு என்னை மாத்திரம் தண்டிப்பது எனது சிறப்புரிமைகளை மீறும் செயல் என்பதை நான் நம்புகிறேன்.
இந்த பிரச்சினைக்கு காரணமான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நளின் பண்டார ஆகியோயருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |