அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
சர்வதேச தொழிலாளர் தினத்தை அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் தொடர்பில் (19.04.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த அவர், ”தொழிலார்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றது.
முதலாவது மே தின கூட்டம்
கொழும்பில் நடத்த இருக்கும் இந்த மே தின கூட்டத்துக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்க இருப்பதோடு, இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து மே தின கூட்டத்தை நடத்துவதற்கே திட்டமிட்டிருக்கிறோம்.

இதன்படி, ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து நடத்தும் முதலாவது மே தின கூட்டம் எதிர்வரும் மே முதலாம் திகதி இடம்பெறும் என நம்புகிறேன்.
அத்துடன் பொதுஜன பெரமுன மே தினத்தை கொண்டாடுவதில்லை என தெரிவித்ததோடு, மே தினத்தை கொண்டாட முடியாத அந்த கட்சி, ஒருபோதும் அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கப்போவதில்லை.
அதேநேரம் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பொதுஜன பெரமுனவை நிராகரித்து, பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை தெரிவு செய்திருக்கிறார்கள் இதனால் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |