உயிரை மாய்த்த மாணவி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை: அதிர வைக்கும் அறிக்கை
புதிய இணைப்பு
கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் சம்பவம் தொடர்பான விசாரணையை முறைப்படுத்தி, விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, காவல்துறை விசாரணை குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல்துறை குழுவிற்கும் இடையே பிரதமர் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையிலும் மேலதிக வகுப்பிலும் நடந்த சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, சரியான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறு பிரதமர் காவல்துறை விசாரணை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
மூன்று இடங்களில் போராட்டங்கள்
பின்னர் மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டதுடன் இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
