யாழில் தாக்கப்பட்ட மாணவன்: வடக்கு ஆளுநர் விடுத்த பணிப்புரை
யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்மைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மாணவனுக்கு உரிய தீர்வு
பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது கடந்த 22 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, குறித்த மாணவனை ஆளுநர் செயலகத்தின் உத்தியோகத்தர் குழாம் நேரில் சென்று நலன் விசாரித்ததுடன், மாணவன் மீதான தாக்குதல் தொடர்பிலும் அறிந்துக்கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |