பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (10) சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளன.
அதன்படி, காலை 09.30 முதல்10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 10.30 முதல் 11.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 முதல் மாலை 6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் இரண்டாம் மதிப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் விவாதம் நடைபெறும்.
மாலை 6.00 முதல் 6.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளும் கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ஏனைய ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 4,434 பில்லியன் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |