சுண்டிகுளம் பகுதியில் யானைகளால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் கவலை தெரிவிப்பு
யாழ். வடமராட்சி - கிழக்கு கட்டைக்காடு ஆலய பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நஷ்ட ஈடு வழங்க யாரும் முன்வரவில்லை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - ஆலய கடற்கரைக்கு வருகை தந்த ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் அங்கு காணப்பட்ட 36 இற்கும் அதிகமான தென்னைகளை நாசம் செய்த சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவித்திருந்தோம் ஆனால் இதுவரை உரியவர்கள் வந்து பார்வையிடவோ, நஷ்ட ஈடு வழங்கவோ இல்லையென பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பூங்கா அடையாளம்

இந்நிலையில், யானைகள் சேதம் ஏற்படுத்திய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருப்பதாகவும் அவர்களுக்கு யானைகள் வந்தது தெரியவில்லை என்றும் இராணுவத்தினர் தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி அதாவது கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பெரும் நிலப்பரப்பு தேசிய பூங்கா என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட தென்னைகளுக்கு இழப்பீடு
அதனை உறுதி செய்யும் விதமாக வனஜீவராசிகள் திணைக்களகத்தினர் வேண்டுமென்றே இந்த யானைகளை வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக சந்தேகிப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு முன்னாயத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட குடும்பஸ்தர் யானைகளால் அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கும் இழப்பீடு கோரியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |