களனி ஆற்றின் தாழ்நில பகுதிகளில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதி நீர்ப்பிடிப்பு பிரதேசங்களில் பதிவான கனமழை காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், திணைக்களத்தின் நீர்மட்ட கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேலும், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பகுதிகளில் வசிப்போர், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |