பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் வழக்கு ஒத்திவைப்பு!
கொக்கேயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் பூர்வாங்க விசாரணைப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02-1--2026) உத்தரவிட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசேகர முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை
இதன்போது காவல்துறை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முதன்மைப் பிரதிவாதி ஷிரான் பாசிக், காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் அடங்கியக் கோப்புகளை அரசத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்தார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க, சட்டத்தரணிகளான சமிந்த அத்துகோரல மற்றும் வசந்த பிட்டிகல ஆகியோர், குறித்த ஆவணங்களை ஆராய்ந்து அதில் ஏதேனும் விடுபடல்கள் அல்லது குறைபாடுகள் இருப்பின் அதனை அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் கவனத்திற்குப் கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.
அரசத் தரப்பு
தொடர்ந்து சான்றுப் பொருட்கள் தொடர்பில் மன்றில் தெளிவுபடுத்திய அரசத் தரப்பு சட்டத்தரணி, இந்த வழக்கில் சான்றுகளாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் தொகுதி தற்போது அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி, குறித்த சான்றுப் பொருட்களை நீதிமன்றத்திற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தபோதிலும் தற்போது மேல் நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் அறை சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளதால் சான்றுப் பொருட்களை மன்றுக்கு அழைப்பது தொடர்பில் தற்போது எவ்வித கட்டளையும் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக பூர்வாங்க விசாரணைப் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |