ஷிரந்தியின் பிணை எதிர்பார்ப்பும்...மகிந்தவின் வைத்தியசாலை அனுமதியும்
இலங்கை ஊடகங்களில் இன்று மிக முக்கிய பேசுபொருளாகவும், முதன்மை செய்தியாகவும் இரு விவகாரங்கள் வெளியிடப்பட்டன.
அதில் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை சீரின்மை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும், மற்றையது முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டமையும்.
மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்த கேள்விகள் அண்மையில் நடந்த மொட்டுக்கட்சியின் செய்தியாளர் சந்திப்புக்கள், பிரசாரங்கள் என்பவற்றை மையப்படுத்தி எழுப்பப்பட்ட ஒன்று.
அவர் வயது மூப்பு காரணமாக மொட்டுக்கட்சியின் வெளிக்கள செயற்பாடுகளில் இருந்து தவிர்த்தமையும், உள்ளக ஆலோசனை விடயங்களில் மாத்திரம் கலந்துகொண்டமையும் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த மாதம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற மொட்டுக்கட்சியின் கூட்டத்திலும் மகிந்தவின் உடல்நிலை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த தொடர்ச்சியில் இன்று மகிந்த கொழும்பிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறுபுறம் சிரிலிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷிரந்தி தன்னை பிணையில் செல்ல அனுமதிக்கக் கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு விவகாரங்களையும் தொடர்புபடுத்தி சில சமூக ஆர்வலர்கள், ஷிரந்தியின் பிணையைத் தக்கவைத்துக்கொள்ள மகிந்த மருத்துவமனைக்குச் சென்றாரா எனக் கேள்விகளை எழுப்புகின்றனர்.
மகிந்தவின் இன்றைய மருத்துவ விடயத்தில் மொட்டுக் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிறைந்து இருந்தன.
இதில் எது உண்மை? மகிந்த உண்மையில் மருத்துவமனையில்தானா? அல்லது இது அரசியல் இலாபம் தேடும் பிரசாரமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
கடந்த 7 ஆம் திகதி ஷிரந்தி கைது செய்யப்பட்டபோது, வழக்கை தாண்டி அவர் அணிந்திருந்த கண் கவசம் எவ்வாறு பேசுபொருளானதோ அதே போல இன்று மகிந்தவின் இந்த விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.
அந்த வகையில் அண்மையில் இடம்பெறும் மோசடி விசாரணைகளில் ராஜபக்சர்களின் பெயர் அடிக்கடி இடம்பெற்று வருகிறன.
அவை நீதிமன்றங்களில் இருந்தும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்தும் புதிய கைதுகளையும் தண்டனைகளையும் பக்கங்களாக்குகின்றன.
இந்த நிலையில் நேற்றைய ஒரு மக்கள் சந்திப்பில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் இறங்க குணசேகர முன்வைத்த கருத்துக்கள் ராஜபக்சர்களின் மோசடி எவ்வாறு இந்த நாட்டை பாதித்தது என்பதை விளக்கியிருந்தார்.
"இன்று ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அப்பா, மகன், மூத்த மகன், நடுத்தர மகன், ரொக்கெட் மகன், பாட்டி, தாத்தா என அனைவரும் ஏதோ ஒரு வகையில் திருட்டு மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் .
ஒட்டுமொத்தக் குடும்பமுமே மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இத்தனை காலம் மக்கள் பணத்தைச் சூறையாடியவர்களுக்கு எதிராக தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது" என நேரடியான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
''தற்போது சிறையில் அடைக்கப்படுபவர்கள் நாட்டை அல்லது இனத்தைக் காப்பாற்றச் சென்றதால் சிறைக்குச் செல்லவில்லை.
அவர்கள் செய்த மோசடிகள் அம்பலமாகி, மாட்டிக்கொண்டதாலேயே இன்று சிறைக்கம்பிகளை எண்ணுகிறார்கள்.
ஊழல் மற்றும் மோசடி காரணமாக சிறைக்குச் செல்லும் அரசியல் பிரதிநிதிகள் எழுப்பும் கூச்சல்களை மக்கள் புத்திசாலித்தனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தனை காலம் மக்கள் பணத்தைச் சூறையாடியவர்களுக்கு எதிராக தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது.
மேலும் திருட்டிலும் முறைகேடான கடத்தல்களிலும் ஈடுபட்டவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நாளாக மக்களால் இது பார்க்கப்படுகிறது'' என்று அரசாங்க பிரதிநிதிகள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |