அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் ஏழு நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது போதுமானதாக இல்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதனால் அந்த நீரிணையை திறக்கும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே உள்ளது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஈரானின் ஏழு நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் அதன் பதில் போதுமானதாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஈரானின் ராஜதந்திரம் மாறிவிட்டது, பழைய நிலைமைக்கு திரும்புதல் இருக்காது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்
ஈரான் மீது 27 நிறுவனங்கள், ஆறு தனிநபர்கள் மற்றும் 22 கப்பல்களை இலக்காகக் கொண்டு, 'ஒபரேஷன் எக்கோனமிக் அவுட்காஸ்ட்' என்ற புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அண்மையில் விதித்தது.

இந்நிலையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு, கடந்த மாதம் ஈரான் கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்தது.
நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஹோர்முஸ் நீரிணை திறப்பு
அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குவது மற்றும் ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட சில நிபந்தனைகளை வோஷிங்டன் நிறைவேற்றினால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்று ஈரான் முன்மொழிந்தது.

இதற்கிடையில், சனிக்கிழமையன்று, நவம்பர் 3 இடைக்காலத் தேர்தல் முடியும் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என கடந்த வாரம் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |