20 இலட்சம் நீரிழிவு நோயாளிகள் ஆபத்தில்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நீரிழிவு நோய் - சித்த மருத்துவத்தின் பங்கு நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நீரிழிவு பிரிவு வைத்தியர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி குறைபாடு மற்றும் மனஅழுத்தம் ஆகியவை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை உலகளவில் அதிகரிக்கச் செய்கின்றன.
இன்று ஒவ்வொரு பத்துப் பேரில் ஒருவராவது இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது மருத்துவ புள்ளிவிபரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தின் பார்வையில், நீரிழிவு என்பது உடலின் மூன்று தாதுக்களின் (வாதம், பித்தம், கபம்) சமநிலையின்மை காரணமாக ஏற்படும் நோயாகக் கருதப்படுகின்றது.
எனவே, வெறும் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்லாமல், உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நலனை நோக்கமாகக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
அதிக இனிப்பு, எண்ணெய் உணவுகள், இரவில் தாமதமாக உறங்குதல் மற்றும் மரபணு காரணிகள் ஆகியவை நீரிழிவுக்கான முக்கியமான காரணிகளாகும்.
தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைவு, பார்வை மங்கல் போன்றவை இதன் வழக்கமான அறிகுறிகள் ஆகும்.
சித்த மருத்துவம் இயற்கை மூலிகைகளைக் கொண்டு நீரிழிவு கட்டுப்படுத்துவதற்கான நம்பத்தகுந்த வழிமுறைகளை வழங்குகிறது.
இம்மருந்துகள் அரச சித்த வைத்தியர்களின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
சித்த சிகிச்சை மூன்று நிலைகளில் நடைபெறுகிறது,
- உடல் சுத்திகரிப்பு – திரிபலா சூரணம், நாவல் விதை சூரணம் போன்ற மருந்துகள்.
- நோயைக் கட்டுப்படுத்துதல் – நோயின் அடிப்படை காரணிகளைச் சீர்செய்யும் சிகிச்சை.
- வாழ்க்கைமுறை மாற்றம் – யோகாசனம், நடைபயிற்சி, மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்கம்.
சமீபத்தில் பேராசிரியர் ரெஸ்னி காசிம் குறிப்பிட்டபடி, நீரிழிவு கால்காயங்கள் சில சமயங்களில் புற்றுநோயை விட ஆபத்தானவை.
இதனையடுத்து, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கமாகிய நாம், சித்த மருத்துவத்தை தேசிய நீரிழிவு சுகாதாரத் திட்டங்களில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
சித்த மருத்துவத்தில் கால்காயங்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் வெளிச்சிகிச்சை முறைகள் உள்ளன.
அவை நரம்பு, இரத்த ஓட்டக் கோளாறுகளைச் சரிசெய்து நோயாளிகளை குணமடையச் செய்கின்றன.
மேற்கத்திய மருத்துவர்களுடன் இணைந்து சித்த வைத்தியர்கள் பணியாற்றும் சூழல் உருவானால், நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறந்த பராமரிப்பு கிடைக்கும்.
இலங்கையில் தற்போது சுமார் 20 இலட்சம் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப நிலைகளிலேயே சித்த சிகிச்சை அளிக்கப்பட்டால் கால்காயங்களின் கடுமையான விளைவுகள் மற்றும் உறுப்புகள் இழப்பைத் தவிர்க்க முடியும்.
இலங்கையின் பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, கைதடி சித்த போதனா வைத்தியசாலை, கோணேசபுரி சித்த போதனா வைத்தியசாலை, மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூர் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை, பல்லேகலை, தியத்தலாவ, அனுராதபுரம் மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, இரத்தினபுரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, டீ.பீ. வெலகெதர மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, கல்முனை, மொல்லிகொட, மின்னேரியவில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை. ஓந்தாச்சிமடம், கப்பல்துறை, மாதம்பே, ஏறாவூர், மட்டக்களப்பின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு ஆகிய ஆதார வைத்தியசாலைகள், தள வைத்தியசாலைகளான மன்னார், வவுனியா, அச்சுவேலி, கிளிநொச்சி, கொத்மலை, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளான நேபட, வீதியகொட, கோபாலபுரம், பண்டத்தரிப்பு, கொடிகாமம், பன்விலை, நில்தண்டாஹின்ன, தொலுவ, நாரம்மல, நெதலகமுவ, வாரியபொல, அம்பன்பொல, முருதென்கே, நோர்த் மாத்தளை, தென்ன, கெலிஓய, தொலுவ ஆகிய இடங்களிலும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இலங்கையின் சகல பிரதேச சபைகளின் கீழும் இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகள் வழியாகவும் பொதுமக்கள் தரமான சிகிச்சைகளை இலவசமாகப் பெறமுடியும்.
இருப்பினும், இச்சேவைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் இதன் முழுப் பயனையும் பெற முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |