டித்வா சூறாவளியினால் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி
டித்வா சூறாவளியினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று (27) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டித்வா சூறாவளி இலங்கையை தாக்கி ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோதே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி இலங்கைக்குத் தென் கிழக்கேயுள்ள கடற்பரப்பில் உருவான தாழமுக்கம், பின்னர் ‘டித்வா’ எனும் பாரிய சூறாவளியாக வலுவடைந்து நாட்டின் பல பாகங்களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கடுமையான பாதிப்பு
இந்தச் சூறாவளியின் தாக்கத்தினால் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 540 மில்லிமீற்றர் வரையிலான மிக அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதனால் நாட்டின் 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின.

அப்போது ஏற்பட்ட கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவுகள் காரணமாக வீதிக் கட்டமைப்புகள், வீடுகள் மற்றும் பெருமளவிலான விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்தன.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 173 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |