றீ(ச்)ஷா வளாகத்திற்கு வருகை தந்த பிரித்தானிய பல்கலைக்கழக பேராசிரியர்!
பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Leicester) தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சேர் நிசான் கனகராஜா (Professor Sir Nishan Canagarajah), றீ(ச்)ஷா வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் துணைவேந்தர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.
அத்தோடு உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளுக்கு ஆற்றிய மகத்தான சேவைகளுக்காகப் பிரித்தானிய மன்னரால் மிக உயரிய சேர் (Knight Bachelor) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்.
சொந்தப் பணம்
போர்க்காலச் சூழலால் புலம்பெயர்ந்து சென்றாலும் தனது தாய்மண்ணையும் வேர்களையும் மறவாமல் தாயகம் திரும்பியுள்ள பேராசிரியர் சேர் நிசான் கனகராஜா, தான் ஆரம்பக் கல்வியைப் பயின்ற யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் போரினால் உயிரிழந்த தனது சக மாணவர்களின் நினைவாக விசேட நிதியமொன்றை உருவாக்கியுள்ளார்.
பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் உன்னத நோக்கத்துடன் அந்நிதியத்திற்குத் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு இலட்சம் பவுண்டுகளை (100,000 GBP) அவர் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள றீ(ச்)ஷா வளாகத்திற்கு வருகை தந்த பேராசிரியர் சேர் நிசான் கனகராஜா, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் சகல செயற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.
உலக அரங்கில் ஈழத்தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்குப் பெருமை சேர்த்த எமது மண்ணின் மைந்தனைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |