சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் : உண்மைகளை வெளிப்படுத்திய ரணில் ஆதரவு எம்.பி!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடைய செய்யும் வகையில் எதிர்க்கட்சியினர் செயல்படுவதாக ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாடுகள் உதவி வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் இவ்வாறாக செயல்படுவது குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
வரவு செலவு திட்டம்
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டதை போன்று தயாரிக்கப்பட்டதல்ல என நிமல் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறித்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, வரவின் ஊடாக இலங்கை செலவுகளை சமாளிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அரசியல் ஆதரவுகளை எதிர்ப்பார்க்காத ரணில்
அத்துடன், இலங்கையில் தற்போது பணம் அச்சிட முடியாதென்பதை சுட்டிக்காட்டிய நிமல் லன்சா, கடன் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு அளவு இருப்பதாக கூறியுள்ளார்.
இதனடிப்படையில், அரசியல் ஆதரவுகளை எதிர்ப்பார்க்காது, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் தயாரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் இந்த வரவு செலவு திட்டம் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை தற்போது பாரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சி
இலங்கையின் நிலையை மேம்படுத்த எதிர்க்கட்சியினரிடம் எந்தவொரு திட்டமும் இல்லையென நிமல் லன்சா கூறியுள்ளார்.
வரிகளை அதிகரிப்பது, மின்சார கட்டணத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் விருப்பமின்றி முன்னெடுப்பதாக அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை மேம்படுத்தும் வகையில் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் எப்போது்ம் எதிர்ப்பதாகவும், இவ்வாறான எதிர்ப்புக்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாதெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |