இருண்ட யுகத்துக்குள் செல்லும் இலங்கை! எச்சரிக்கும் முன்னாள் சபாநாயகர்
இலங்கையை (Sri Lanka) இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தினரதும் பொறுப்பு என நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் அனைவரும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்த காலத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் மூதூரில் (Mutur) கஞ்சி வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தமை தொடர்பில் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருண்ட யுகம்
இலங்கையில் இடம்பெற்ற யுத்ததத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இருக்கும் மனவேதனையை ஒரு சமூகம் என்ற வகையில் உணர்வுபூர்வமாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, அரச அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமும் இவ்வாறான சூழ்நிலைகளின் போது இலங்கையின் பொது நலனை முதன்மையாக கருதி செயல்பட வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டை மீண்டும் இருளில் தள்ளுவதற்கு அதுவே காரணமாக அமையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு துர்பாக்கிய சம்பவங்களினால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரையும் எண்ணி தான் மிகுந்த மன வேதனை அடைவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீண்டும் இலங்கையில் போர் சூழல் ஏற்படுவதை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்புகளிடத்திலும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |