விவசாயப் பொருட்களுக்கான வரியை அரசு நீக்க வேண்டும் : விஜித ஹேரத் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் நெற்செய்கையில் இருந்து விலகி வருவதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தாா்.
விவசாய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விவசாய பொருட்களுக்கான வரியை நீக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நெல் அறுவடை
''நெல் அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு முறையான விலை நிர்ணயம் செய்து அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.

ஆனால் நாட்டில் அதிகமான மாவட்டங்களில் நெல் அறுவடை இடம்பெற்று 2 மாதங்கள் கடந்துள்ள நிலையிலேயே தற்போது நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கிறோம்.
தற்போது விலை நிர்ணயம் செய்தாலும் அந்த விலைக்கு நெல் பெற்றுக்கொள்ள நாட்டில் எங்கும் நெல் இல்லை. பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரமே தற்போது நெல் அறுவடை இடம்பெறுகிறது.
நெல் கொள்வனவு செய்ய கடன்
விவசாயிகளிடமிருந்து ஒரு கிலாே நாடு 105 ரூபா, சம்பா 115 ரூபா என பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இருந்து 85, 90 ரூபாவுக்கே நெல் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தற்போது விலை நிர்ணயம் செய்தாலும் கொள்வனவு செய்ய நாட்டில் நெல் இல்லை.

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவு செய்ய கடன் வழங்குவதாக தெரிவித்தாலும் அது இன்னும் இடம்பெறவில்லை. அதனால் அவர்களுக்கு நெல் கொள்வனவு செய்ய முடியாமல் போயுள்ளது.
இன்னும் ஏகாதிபத்திய செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.
நெல்லை கொள்வனவு செய்ய முறையான விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அரசாங்க நெல் கொள்வனவு சபைக்கு முடியாமல் போயிருக்கிறது. நெல் கொள்வனவு செய்ய அவர்களிடம் பணம் இல்லை என தெரிவித்திருக்கிறது.
விவசாய பொருட்களுக்கான வரி
நெல் உற்பத்திக்கான செலவுக்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் நெல் விவசாயிகள் விவசாயம் செய்வதில் இருந்து விலகி வருகின்றனர்.

மேலும் கெளபி, பயறு, உளுந்து இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் புறக்கோட்டையில் இன்னும் மொத்த விலைக்கு இந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும். விவசாயிகளை பலப்படுத்த எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
விவசாய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தை ஊக்குவிப்பதாக இருந்தால் அரசாங்கம் விவசாய பொருட்களுக்கான வரியை இல்லாமலாக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்