இலங்கையில் 4 பில்லியனுக்கும் அதிக கையிருப்பு : நிதி அமைச்சு தகவல்
இந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் அதிகாரபூர்வ கையிருப்பு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக காணப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இது இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்கும் என குறித்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அந்நியச் செலாவணி வரவால் மொத்த கையிருப்பு கணிசமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம்
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் 787 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் இரண்டாவது தவணையாகப் பெற்றுள்ளது.
வரவு செலவுத் திட்டம்
சர்வதேச நிதி நிறுவனங்களின் இந்த குறிப்பிடத்தக்க வெளிநாட்டு நிதியுதவியானது, பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தினால் திருப்திகரமான முன்னேற்றத்திற்கு உறுதியளிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துவதும் நாட்டின் வெளி கையிருப்புகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |