யாழ். கடற்பரப்பில் சம்பவம்: இந்திய கடற்றொழிலாளர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் பலி
யாழ்ப்பாணம் (jaffna) – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (25.4.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கடற்றொழில்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு கடற்பரப்பில் அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.
இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேரும், கடற்றொழிலாளர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம்
இந்நிலையில், உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |