இலங்கைக்கு கடுமையான பொருளாதார சீர்திருத்தம் அவசியம் : ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்!
இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் ஊடாக வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான 2023 இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே, ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு
கடந்த ஒரு வருடத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, ”இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக கடந்த வருடத்தில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை பொருளாதார மறுசீரமைப்பு என்று கூற முடியுமா என தெரியவில்லை.
மறுசீரமைப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை பார்த்தால் சில வாரங்களுக்கு முன்னர் பொருளாதாரத்திற்கு நாம் மேற்கொண்டது மறுசீரமைப்பு அல்ல.
At the 🇱🇰 Economic Summit, President @RW_UNP declared the imperative need for radical economic restructuring to ensure sustainability of 🇱🇰’s economy, stressing that continuous commitment to a new economic policy framework is essential to avoid a recurring #economiccrisis. (1/9) pic.twitter.com/nK5SkUhmfO
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) November 29, 2023
புதிய பொருளாதாரக் கொள்கை
இது ஒரு முழுமையான மீளமைப்பு அல்லது ஒரு தீவிர மறுசீரமைப்பு என்று சொன்னால் தவறில்லை.
இந்த புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த ஆழமான பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளில் நாம் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தை
கடந்த சில மாதங்களில், இலங்கையிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.
இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணம் காரணமாகவே இந்தச் செயற்பாட்டில் வெற்றிபெற முடிந்தது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு கொள்கையளவில் உடன்பாடு வழங்கிய முதலாவது வங்கி சீனா எக்ஸிம் வங்கியாகும்.
சர்வதேச நாணய நிதியம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வை சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாடாக நாம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்ளடங்கும்.
அதிலிருந்து நாம் பின்வாங்கினால், கடன் வழங்குநர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுவார்கள்.
அரசியல் தலைவர்களால் அங்கீகரிக்கப்படாத திட்டம்
மேலும், பொருளாதார நெருக்கடியின் போது மேடைகளில் இருந்து தீர்வுகளைப் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள் இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை.
இவ்வாறு பேசியவர்கள், இதுவரை எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை.
ஒரு நாடாக, நாம் என்றென்றும் வங்குரோத்து நிலையில் இருக்க முடியாது. எனவே, நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க்கும் வகையில் தற்போது செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |