மாவீரர்களை கொச்சைப்படுத்தும் செயல் - அறிவிப்பை மீளப்பெறுமாறு பகிரங்க கோரிக்கை
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி "மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினைவு கூறுவோம்" என வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக அறிவித்திருப்பதானது மாவீரர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் (Marikuththu Sakthivel) தெரிவித்தார்.
இந்த விடயத்தில் வேறு எந்த ஒரு மத தலைவர்களுடனும் கலந்தாலோசிக்காது ஆயர்கள் தன்னிச்சையாக தீர்மானத்திருப்பது, மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் எனவும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் ஐபிசி தமிழ் செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் விசேட வழிபாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து ஆலயங்களிலும் இடம்பெறவுள்ளதாக வடக்கு கிழக்கு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமையை குறித்த நாளன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறை வேண்டல் புரியவும் அழைப்பு விடுப்பதாக ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா மற்றும் திருகோணமலை ஆயர் நோயல் இமானுவேல் ஆகியோர் இதற்கான அழைப்பினை விடுத்துள்ளனர்.
இந்த விடயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், ஆயர்களின் அறிவிப்பு மீளப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழர்களின் உரிமை போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், 20ஆம் திகதி போரில் மரணித்தவர்களை நினைவு கூருவது மாவீரர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடாக அமையும் அவர் சுட்டிக்காட்டினார்.