வெடித்தது மோதல் - சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவு?
முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena)தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடந்த வாரம் கட்சித் தலைமையகத்தில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன், முன்னாள் அரசதலைவரும் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமேல் மாகாணத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதியும் அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக்கட்சி வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகடதி வாய்ந்தவர்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்படாத ஒரு சிலரை கட்சியின் அமைப்பாளர் பதவிக்கு நியமித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊவா மாகாண கட்சியின் அமைப்பாளர் ஒருவர் கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்து கட்சிக்கு எழுத்து மூலம் இராஜினாமா அறிவித்துள்ளார். இந்த அமைப்பாளர் கட்சியின் தலைவரை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான பல விடயங்களினால் கட்சி பிளவுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வடமேல் மாகாண, முன்னாள் அரசதலைவர் ஒரு பக்கமாகவும் மற்றும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஏற்கனவே ஒரு பக்கமாகவும் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.