நாடாளுமன்றம் மூலமே 13 இற்கு தீர்வு
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் மூலமே தீர்வைக்காணவேண்டும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ‘டைம்ஸ் ஒவ் இந்தியா’விற்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம் மூலமே தீர்வு

13 வது திருத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து எந்த சந்தேகமும் இல்லை,எனினும் இதற்கு நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும்.
இலங்கை நல்லிணக்கம் தொடர்பாக ஆர்வத்துடன் உள்ளது. அதிபர் ரணில் தொடர்புபட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கை ஆழமாக துருவமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம் நாடாளுமன்றம் மூலமே தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலின் இந்திய விஜயம்

அதிபர் ரணிலின் இந்திய விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கை இந்தியாவின் பாதுகாப்பை தனது பாதுகாப்பாக கருதுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரின் விஜயத்தின்போது பூகோள அரசியல் மற்றும் மூலோபாய அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்தியாவின் பாதுகாப்பே எங்களின் பாதுகாப்பு எங்கள் மத்தியில் நீண்டகால நாகரிக உறவுகள் காணப்படுகின்றன. நாங்கள் ஒரே இரத்தத்தை கொண்டுள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையில் அதிக தொடர்பாடல்களும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அவை அதிபர் ரணிலின் விஜயத்தினால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.