நள்ளிரவுவேளை போராட்டகாரர்களை அப்புறப்படுத்தியது ஏன்..!! மௌனம் கலைத்த காவல்துறை
அதிபர் செயலகத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவே, அதற்கு அருகாமையில் போராட்டகாரர்களால் அமைக்கப்பட்டிருந்த சில தற்காலிக கூடாரங்களை அப்புறப்படுத்த நேரிட்டது என காவல்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கொழும்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
போராட்டகாரர்களை அப்புறப்படுத்தியது ஏன்
“அதிபர் மாளிகை, அதிபர் இல்லம் மற்றும் பிரதமர் செயலகங்களில் தற்போது பணிகளை செய்ய முடியாது நிலைமை காணப்படுகிறது.
இதனால், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோபூர்வ பணிகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதிபர் செயலகத்தில் இருந்து போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அதிபர் செயலகத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டகாரர்கள் அறிவித்திருந்த போதிலும், அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. போராட்டகாரர்கள் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதிபர் செயலகத்தில் இருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு பொலிஸார் 9 முறை அறிவித்திருந்தனர். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
அரச கட்டடங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு தங்கியிருக்க முடியாது
அரச பொதுச் சொத்தான கட்டடங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு தங்கியிருக்க முடியாது. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட காலிமுகத்திடலில் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு சென்று காவல்துறையினர் போராட்டத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை.
அதிபருக்கு பணியாற்ற கூடிய பொருத்தமான சூழலை உருவாக்கி கொடுப்பதற்காகவே அதிபர் செயலகத்தில் இருந்த போராட்டகாரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்” என்றார்.
