நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் எந்தப் பயனும் இல்லை! அனுரகுமார தகவல்
கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி , நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அந்த கட்சி பரிந்துரைத்துள்ளது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.
கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் எனவே மக்களின் உண்மையான ஆணையை பிரதிபலிக்க பொருத்தமான தேர்தல் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது புதிய அரசியலமைப்பில் கட்டாயமாக்க வேண்டும் என்றும் கூறினார்.
புதிய அரசியலமைப்பை அமுல்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்தவும் கருவூலத்தில் இருந்து நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கும் ஒரு விதியைச் சேர்க்க வேண்டும் என்றார்.