ஸ்ரீலங்கா விமானப் படையின் முன்னாள் தலைவரை நாட்டிற்குள் ஏற்க வேண்டாம் என கனேடிய அரசுக்கு கடிதம்!
போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நபரை தமது நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஏற்க வேண்டாம் என உள்ளூர் செயற்பாட்டுக் குழுவொன்று கனேடிய பிரதமரை வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில், ஸ்ரீலங்கா விமானப் படையின் முன்னாள் தலைவர் எயார் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை ஏற்புடையவர் அல்ல என அறிவித்து அவரது நியமனத்தை மறுக்க தமிழ் உரிமைகள் குழு, கனேடிய அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளது.
போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்படும் எயார் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை கனடா அரசு விரும்பத்தகாத நபராக அறிவித்து தூதுவராக தமது நாட்டுக்கு வருவதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அந்தக் குழு கோரியுள்ளது. எயார் மார்ஷல் டயஸ் போர்க் குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தமிழ் உரிமைக் குழு கூறுகிறது, அது மாத்திரமின்றி பொதுநலவாய கோட்பாடுகளை மீறினார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசு எயார் மார்ஷல் டயஸ் வருவதை விரும்பவில்லை, அவர் எமக்கு ஏற்புடையவரல்ல எனும் செய்தியை ஸ்ரீலங்கா அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. மேலும் அவர் மீது மேலதிகமாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும், எதிர்காலத்தில் அவர் மீது தடை விதிக்கும் நடவடிக்கை தேவையா என்பதை ஆராய வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் ஸ்ரீலங்காவின் இராணுவ மற்றும் கடற்படைத் தலைவர்கள் இப்படியான தர்மசங்கடத்திற்கு ஆளாகியிருந்தாலும், விமானப் படைத் தலைவர் ஒருவர் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முதல் முறையாக இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.
இராஜாங்க உறவுகள் குறித்த வியன்னா தீர்மானத்திற்கு அமைய, எந்தவொரு நாடும் தமது நாட்டுக்கு தூதுவராக நியமிக்கப்படுபவரை எவ்விதக் காரணமும் கூறாமால் அந்த நபர் `விரும்பத்தகாதவர்` எனக் கூறி ஏற்க மறுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையும் கனடாவும் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன. கனடாவின் எதிர்ப்பை இலங்கை ஏற்காமல் எயார் மார்ஷல் டயஸ் கனடா வருவாராயின் அவர் மீது போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் வாய்ப்புள்ளது. செஞ்சோலைத் தாக்குதலில் குறைந்தது 53 சிறுமிகள் கொல்லப்பட்டனர், 120ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
அத்தாக்குதல் நடைபெற்ற போது அந்தப் பகுதிக்கு பொறுப்பான வான்படைத் தலைவராக அவர் செயற்பட்டதாக, தமிழ் உரிமைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த வளாகத்தில் சிறுவர்கள் இருந்திருப்பது அவருக்கு தெரிந்திருக்கலாம், எனினும் அடிப்படையில் பொது மக்கள் இலக்கு ஒன்றின் மீது அளவுக்கு அதிகமான தாக்குதலை மேற்கொண்டமைக்கான நம்பத் தகுந்த காரணங்கள் காணப்படுவதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இறுதிக்கட்டப் போரின் போது, போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 57, 58 மற்றும் 59ஆம் படையணியனருக்கு சிரேஷ்ட அதிகாரி எனும் வகையில் காத்திரமான வான் தாக்குதலுக்கு ஆதரவளித்தார் எனவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இராணுவப் படையின் தலைவராக இருந்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேசில் நாட்டுக்கு தூதுவராக நியமிக்கப்பட்ட போது, அவர் மீது பல மனித உரிமை அமைப்புகள் போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
அவரை நாட்டிலிருந்து வெளியேற்றவும் குரல் எழுப்பப்பட்டது. ஆனால் அது தொடர்பிலான முடிவு வருவதற்கு முன்னர் அவர் நாடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.