பாலியல் வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் - நீதிமன்றம் வழங்கிய அனுமதி
அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிணையில்படி அவர் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பவற்றை பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிண்டரில் அறிமுகமான பெண் ஒருவரை சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமைக்காக, தனுஷ்க குணதிலக மீது நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
குணதிலக 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்ட நிலையில் பெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன. அதன்படி அவர் Facebook-WhatsApp பகலில் மட்டும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 27 மீண்டும் விசாரணை
தற்போதய மாற்றத்தின்படி குணதிலக தனது Facebook மற்றும் Instagram கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் துன்புறுத்தப்படுவதாகவும், அவரது கணக்குகளை மூட வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் முன்பு கூறப்பட்டது.
அதேவேளை, குணதிலக்கவின் வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எனவே அரசு தரப்பு மேலதிக தகவல்களை சேகரிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் குணதிலக்கவின் வழக்கு ஏப்ரல் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.