புலம்பெயர்ந்தவர்களை ஈர்க்க ரணிலின் மற்றொரு அஸ்திரம் தயார்! திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ' தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு - 2022 ' விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அதிபர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் காரியாலயம்

குறித்த விசேட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் ஆனது பொருளாதார அரசியல் ரீதியாக வீழ்ந்து கிடைக்கும் சிறிலங்காவை மீட்டெடுக்கும் முகமாகவும் புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவில் முதலீடு செய்ய வைக்கும் நோக்கத்துடனும் குறித்த தடையை சிறிலங்கா அரசு நீக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
உதவிகளை எதிர்பார்க்கும் சிறிலங்கா அரசாங்கம்

இதேவேளை, புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்த்து இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்ப, புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே சில அமைப்புகள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.