ரணிலின் கைதால் சர்வதேச அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அநுர அரசாங்கத்திற்கு ராஜதந்திர ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளக்கமறியல் உத்தரவு
கடும் இழுபறிக்கு மத்தியில் நேற்றிரவு விளக்கமறியல் அறிவிக்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
எனினும் இன்றையதினம் உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ரணில் மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதன் பின்னணியில் மேற்குலக நாடுகளின் கடும் அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து கேள்வி
இந்தியாவின் உயர்மட்ட தரப்புக்களில் இருந்தும் ரணிலின் கைது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளுடன் மிகவும் நெருக்கமான செயற்பட்ட இலங்கை ஜனாதிபதிகளில் ஒருவராக ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார்.
இந்நிலையில், வெளிநாட்டு பயணம் ஒன்றை காரணம் காட்டி, அவரை சிறையில் வைக்க முயற்சிப்பது அபத்தம் என ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரணிலின் கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடனான ரணிலின் உறவு
இதுவொரு தவறான செயற்பாடு என சாடியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாகவும் அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மிகவும் நெருக்கமான ராஜதந்திரியாவார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் அமெரிக்கா ஊடாக பல உதவிகளை பெற்றுக்கொடுக்க ஜூலி சுங் பாடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
