வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிக்கிய பொன்சேகா- நெருக்கமான நபர் தொடர்பில் வெளியான தகவல்!
சரத் பொன்சேகாவின் மருமகன் எனக் கருதப்படும் நபரின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு மீள செயற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா, அன்றைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் பொன்சேகா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக கடுமையான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போதே பொன்சேகாவின் மகளின் முன்னாள் கணவரான தனுன திலக்கரட்னவின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா இராணுவத்தினருக்கு தளபாடங்களை விநியோகிக்கும் விலை மனுவை பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் எனக் கருதப்படும் தனுன திலக்கரட்னவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டதை அடுத்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்குள் மீண்டும் செயற்பாட்டுக்குத் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவுக்கு வெள்ளை கொடி வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தனுன திலக்கரட்னவுக்கு எதிராக போலி ஆவணம் சமர்ப்பிப்பு தொடர்பான இந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து தனுன திலக்கரட்னவுக்குரிய ஏழு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு தனுன திலக்கரட்ன இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் வங்கிக் கணக்குகளின் முடக்கம் நீக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீட்டில் வங்கிக் கணக்குளின் முடக்கம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் அவை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் இரண்டு புதல்விகளில் ஒருவரை தனுன திலக்கரட்ன திருமணம் செய்திருந்தார்.
பின்னர் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். அமெரிக்காவில் வசிக்கும் சரத் பொன்சேகாவின் புதல்வி வேறு ஒருவரை மணந்துக்கொண்டார்.
